இன்னும், எவர்கள் தங்களது செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அ(ந்த தோட்டத்)தை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. ஆக, அதை அடைமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் அதை அடைவது போதும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.