VERSES
7
PAGES
1-1

பெயர்:

இந்த அத்தியாயத்தின் ஓரிடத்தில் ஆலு இம்ரான் -- அதாவது இம்ரானின் வழித்தோன்றல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே அந்தச் சொல்லே ஓர் அடையாளமாக இந்த அத்தியாயத்தின் பெயராக்கப்பட்டு விட்டது.

அருளப்பட்ட காலமும் கருத்துக் கூறுகளும்:

இதில் நான்கு உரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் உரை, வசனம் ஒன்று முதல் 32 வரை செல்கிறது. இது பெரும்பாலும் பத்ருப்போர் முடிந்த அண்மைக் காலத்தில் இறங்கியது எனலாம்.

இரண்டாம் உரை, வசனம் 33-இல் 'இன்னல்லாஹஸ்தஃபா' எனும் சொற்றொடரிலிருந்து தொடங்கி, வசனம் 63 இல் நிறைவுறுகிறது. இவ்வுரை ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு நஜ்ரானின் தூதுக்குழு வருகை தந்த போது இறங்கியது.

மூன்றாம் உரை, வசனம் 64இல் இருந்து வசனம் 120 வரை செல்கின்றது. இதனுடைய காலம், முதல் உரை இறங்கிய காலத்தை ஒட்டியதாகவே தென்படுகிறது.

நான்காம் உரை, வசனம் 121 முதல் வசனம் 200 வரை செல்கின்றது. இது உஹதுப் போருக்குப் பின்னர் இறங்கியது.

உரையும் விவாதப் பொருள்களும்:

இந்த அத்தியாயத்தில் குறிக்கோளும், விவாதப் பொருளும், மையக் கருத்தும் ஒரே மாதிரியானவையாய் இருப்பதுதான் இந்தப் பல்வேறு உரைகளை ஒன்றிணைத்து ஒரு தொடர் கட்டுரையாய் அமைகின்றது. இந்த அத்தியாயம் குறிப்பாக இரு குழுவினரை நோக்கி உரையாடுகின்றது. ஒரு குழுவினர், வேதம் அருளப்பட்ட யூதர்களும், கிறிஸ்தவர்களுமாவர். இன்னொரு குழுவினர், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் ஆவர்.

முதல் குழுவினருக்கு அத்தியாயம் 2 அல்பகறாவில் அறிவுறுத்தத் தொடங்கிய அதே பாணியில் மேலும் சில அறிவுரைகள் அருளப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பிரிவினர் -- அவர்களோ இப்பொழுது சிறந்த இலட்சியக் குழு எனும் முறையில் சத்தியத்தைக் கட்டிக் காப்பவர்களாகவும், உலகைச் சீர்திருத்தும் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டிருந்தனர் -- அவர்களுக்கு இரண்டாம் அத்தியாயம் 'அல்பகறா'வில் அளிக்கப்பட்ட அறிவுரைகளுடன் இன்னும் அதிக அறிவுரைகள் இங்கு அருளப்பட்டிருக்கின்றன. மார்க்க, ஒழுக்க வீழ்ச்சிகளையெல்லாம் படிப்பினையூட்டும் வகையில் படம் பிடித்துக் காட்டி -- வீழ்ச்சியுற்ற சமூகங்களின் அடிச்சுவட்டில் நடைபோட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரு சீர்திருத்தக் குழு எனும் முறையில் அவர்கள் எவ்விதம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருளப்பெற்ற சூழ்நிலையும் வரலாற்றுப் பின்னணியும்:


இந்த அத்தியாயம் இறங்கிய வரலாற்றுப் பின்னணிகள் இவைதாம் :

1. இரண்டாம் அத்தியாயமான அல் பகறாவில் இந்தச் சத்திய மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்வோர்க்கு எந்தச் சோதனைகளையும் இன்னல்களையும் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்ததோ -- அந்தச் சோதனைகளும் துன்பங்களும் இப்போது முழு வேகத்துடன் வந்து சூழ்ந்து கொண்டிருந்தன. பத்ருப் போரில் இறைநம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டது. எனினும், அந்தப் போர் தேன் கூட்டில் கல்லெறியும் செயலுக்கு ஒப்பாயிருந்தது! எனவே அதற்குப் பின்னர் எல்லாப் புறங்களிலும் ஒரு பெரும் கொந்தளிப்புக்கான அறிகுறிகள் தென்படலாயின. முஸ்லிம்கள் நிரந்தரமான அச்சத்திற்கும் இடைவிடாத அமைதியின்மைக்கும் ஆளாகி விட்டிருந்தார்கள்.

2. ஹிஜ்ரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த யூதக் குலங்களுடன் பல உடன்படிக்கைகள் செய்து கொண்டார்கள். ஆனால், அந்த யூதர்கள் அந்த ஒப்பந்தங்களைச் சிறிதும் மதித்து நடக்கவில்லை. தொடர்ந்து அவற்றிற்கு மாற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இறுதியில், அந்த யூதர்களின் பகைமைப் போக்குகளும், தில்லுமுல்லுகளும் ஒப்பந்தத்தை மீறும் போக்குகளும் இனிச் சகிக்க முடியாது எனும் அளவிற்கு எல்லை கடந்து விட்டன! அந்நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்கு சில மாதங்களுக்குப் பின் யூதர்களிலே மிகவும் விஷமிகளாக இருந்த 'பனூ கைனுகாஃ' என்ற குலத்தார் மீது தாக்குதல் நடத்தினார்கள். மேலும் அவர்களை மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதனால் பிற யூதக்குலங்கள் கொண்டிருந்த கோபத் தீ சீறியெழுந்தது. அந்த யூதர்கள், மதீனாவின் நயவஞ்சக முஸ்லிம்களுடனும் ஹிஜாஸ் மாநில இணைவைக்கும் குலங்களுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்து, இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக எல்லாத் திசைகளிலும் பேராபத்துக்களை ஏற்படுத்தினர்.

3. பத்ருப் போரில் தோல்வியடைந்த பின் குறைஷிகள் நெஞ்சில் பழி வாங்கும் உணர்வு மூண்டு விட்டிருந்தது. கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த அவர்களின் கோபத் தீயில் யூதர்கள் மேலும் எண்ணெய் வார்க்கலாயினர். இதன் விளைவாக ஓர் ஆண்டு கழிந்த உடனேயே மக்காவிலிருந்து மூவாயிரம் பேர் கொண்ட மாபெரும் படை மதீனாவின் மீது போர் தொடுத்தது. உஹது மலை அடிவாரத்தில் இந்தப் போர் நடைபெற்றது. எனவே உஹதுப் போர் எனும் பெயரால் இது பிரபலமாகியுள்ளது.

4. உஹதுப் போரில் முஸ்லிம்கள் அடைந்த தோல்வியில் நயவஞ்சகர்களின் சதித்திட்டங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. என்றாலும் அதனுடன் அத்தோல்வியில் முஸ்லிம்களின் பலவீனங்களுக்கிருந்த பங்கு சற்றும் குறைந்ததல்ல. எனவே போர் முடிந்தவுடன் போர் நிகழ்ச்சிகள் முழுவதையும் விரிவாக அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்து, அதில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முஸ்லிம்களிடையே காணப்பட்ட பலவீனம் ஒவ்வொன்றையும் கோடிட்டுக் காட்டி அவற்றைத் திருத்திக் கொள்ளத் தேவையான அறிவுரைகள் அளிப்பது அவசியமாயிற்று. இந்தப் போர் பற்றி குர்ஆன் செய்திருக்கும் விமர்சனம் இதர கோட்பாட்டினர் (அன்றும் இன்றும்) தாம் புரியும் போர்கள் முடிவடைந்த பின் செய்கின்ற விமர்சனத்திற்கு எத்துணை மாறுபட்டதாய் விளங்குகின்றது எனும் விஷயம் இங்கு நாம் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

Source: Sayyid Abul Ala Maududi - Tafhim al-Qur'an - The Meaning of the Quran